கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சிவாயத்தில் ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான சிவபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோவிலில் பெரியநாயகி உடலுறை சிவபுரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவில் பிரதோஷத்திற்க்கென்றே கட்டப்பட்டதாகும். பாடல் பெற்ற இக்கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது. பழமையும், பெருமையும் வாய்ந்த இக்கோயிலில் சமீபத்தில் சுமார் 25, ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சுருள் ஓலைசுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவை அழியும் தருவாயில் ஆங்காங்கே கிடந்துள்ளது.
தமிழ்நாடு அரசு மிகப் பழமையான கோயில்களில் உள்ள ஓலைச்சுவடிகளை ஒன்று திரட்டி அவற்றின் வரலாற்று உண்மைகளை அறிய குழு அமைக்க உத்தரவிட்டிருந்து. இதனை அடுத்து, இந்து அறநிலை துறை சார்பில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் இலக்கிய சுவடிகள் புலம் துறையின் உதவி பேராசிரியர் முனைவர் தாமரை பாண்டியன் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் உள்ள ஆறு பேர் கோவிலில் அழியும் நிலையில் இருந்த சுருள் ஓலை சுவடிகளை ஒன்று திரட்டி, இதனை சுத்தம் செய்து, ரசாயன கலவைகள் பூசி, தொகுக்கும் பணியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவற்றில் உள்ள வரலாற்றுப் பதிவுகள் கணினி மூலம் பதிவிறக்கம் செய்யவும் இந்து அறநிலை துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு கணினி மாயமாக்கும் பட்சத்தில், கோவில் வரலாறு, பூஜைகள், இலக்கியங்கள் உள்ளிட்ட வரலாற்று பதிவுகளை அனைவரும் அறிய முடியும்.