திருச்செந்தூர் கந்தசஷ்டி 4ம் திருவிழா: வள்ளிகுகை மலையில் தொட்டில் கட்டி குழந்தையில்லா தம்பதிகள் வழிபாடு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கந்தசஷ்டி 4ம் திருவிழாவான இன்று வள்ளி குகையில் தொட்டில் கட்டி குழந்தையில்லா தம்பதிகள் பயபக்தியுடன் வழிபட்டனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா, கடந்த 25ம் தேதி துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் பகுதியில் தங்கி விரதம் இருந்து சுவாமியை வழிபட்டு வருகின்றனர். கந்த சஷ்டி திருவிழாவின் 4ம் நாளான இன்று காலை 10 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அரோஹரா கோஷத்துடன் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி சப்பரத்தில்  எழுந்தருளி சண்முகவிலாசம் மண்டபம் சேர்ந்தார். அங்கு மகாதீபாராதனை நடந்தது. இன்று 4ம் திருவிழாவையொட்டி வள்ளிகுகை அருே சந்தனமலையில் குழந்தையில்லாத தம்பதிகள் தொட்டில் கட்டியும், திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறு கட்டியும் பயபக்தியுடன் வழிபட்டனர். பின்னர் மாலை 5 மணிக்கு சுவாமி எழுந்தருளி கந்தசஷ்டி மண்டபம் வந்தடைகிறார்.

அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு தங்கத்தேரில் சுவாமி எழுந்தருளி கிரிபிரகாரம் வலம் வந்து கோயிலில் சேருகிறார். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், செந்தில்முருகன், ராமதாஸ் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

கந்தசஷ்டி திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்து வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில்  திருச்செந்தூர் டிஎஸ்பி ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காந்தி, கல்யாணசுந்தரம் மற்றும் போலீசார் செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.