“நானும் கிராமப்புற விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன்தான்!" – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகேவுள்ள கொணமங்கலம் கிராமத்தில், அறிவுசார் மற்றும் வளர்ச்சி குறைபாடுடைய மாணவர்களுக்காக அறக்கட்டளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, இயற்கை முறையில் புதிதாக கட்டப்பட்ட 5 கட்டடங்களை நேற்றைய தினம் திறந்து வைத்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. அப்போது பேசிய அவர்,  “சேவை மற்றும் தானம்… நமது பாரதத்தின் பழமையான கலாசாரம், பழமையான பாரம்பர்யம். நம் சமூகத்துக்காக, பலரும் பல நல்ல செயல்களை அமைதியாக செய்து கொண்டு வருகின்றனர். அவர்கள், நம் சமூகத்துக்கு தேவையானவர்கள். இந்த அறக்கட்டளையின் நிறுவனர் கார்த்திகேயன் என்னைச் சந்தித்துப் பேசியபோது, நானே நேரில் வருவதாக அவரிடம் விருப்பத்தோடு கூறினேன்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆனால், `மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக இந்த வளாகம் அமைந்திருப்பது கிராமப்புற பகுதியில், அது தங்கள் வருகைக்கு சௌகரியமாக இருக்குமா எனத் தெரியவில்லை’ என்றார் அவர். அதற்கு நான், ‘நானும் கிராமப்புற விவசாய குடும்பத்திலிருந்து வந்தவன்தான். ஆகையால் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறிவிட்டேன். அதன்படி, நீண்ட நாள்களுக்குப் பின்னர் இங்கு வந்திருக்கிறேன்.

தற்போது பிறக்கும் குழந்தைகளில், சில குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கின்றன. குறைபாடுகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா நடத்திய ஆய்வில், 50-ல் ஒரு குழந்தை இதுபோன்ற குறைபாடுகளுடன் பிறப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது பெரிய அளவிலான எண்ணிக்கை. கிட்டத்தட்ட அவர்களின் மக்கள் தொகையில் 2 சதவிகிதமாகும். அதேபோல், நம் நாட்டில் மத்திய அரசின் சமூக நலத்துறை அமைச்சகம் 2016-17-ல் மாதிரிகளை வைத்து நடத்திய ஆய்வில், 50 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அறிவுசார் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும், பெண் குழந்தைகள் பற்றிப் பதிவாவதில்லை.

ஒரு தம்பதியினர், தங்களுக்குப் பிறக்கும் குழந்தையை தெய்வீக அருள்பெற்ற குழந்தையாக நினைக்கிறார்கள். அதனாலேயே அந்த குழந்தைக்கு ஒன்று என்றால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அறிவுசார் குறைபாடுள்ள ஒரு குழந்தை பிறந்திருந்தால், சில வருடங்கள் கழித்து தாமதமாகத்தான் தெரியவரும். அதனை, அந்த பெற்றோர் பேரதிர்ச்சியாக உணர்வார்கள். முதலில், தன் குழந்தை குறைபாட்டால் பாதிக்கப்படவில்லை என நினைக்க வேண்டும், அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வும் சமூகத்துக்குத் தேவை. இந்த காலத்தில் நவீன அறிவியலும் விரிவடைந்துதான் இருக்கிறது. தன்னுடைய குழந்தைதான் சிறந்த குழந்தை, மற்றவர்களின் குழந்தைகள் எல்லாம் வேறு என்ற எண்ணம் வேண்டாம். எந்நேரமும், யாருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

விழா மேடையில் தமிழக ஆளுநர்

மேலும், இந்தக் குழந்தைகளுக்காக பல்வேறு காரணங்களால் அரசாங்கத்தால் தனி கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறது. ஏனெனில், ஊழியர்கள் எல்லோருமே சேவை மனப்பான்மையோடு இருப்பதில்லை. ஒரு வேலையை, பணியாளராக மட்டுமே செய்பவர்களும் உண்டு. ஆகவே, இது போன்ற பணிகளை செய்வதற்கு சேவை மனப்பான்மைதான் அவசியமானது. அதனை நல்லமுறையில் செய்துவரும் கார்த்திகேயன் – லட்சுமி தம்பதிக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.