நான் பிடிவாதக்காரன்: கே.பாக்யராஜ்

பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9. இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டே பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு மாரிஸ்வரன், இசை கார்த்திக் ஹர்ஷா.

இந்த படம் ஒரே ஷாட்டில் உருவாகி உள்ளது. ஒரு களத்தில் 24 கேமராக்கள், 150க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைள், 450தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கே.பாக்யராஜ் பேசியதாவது:
நான் கொஞ்சம் பிடிவாதக்காரன். நல்ல விஷயத்திற்காக எப்போதும் பிடிவாதமாகத்தான் இருப்பேன். நான் கதை எழுதிய ஒரு கைதியின் டைரி படத்திற்காக நான் எழுதிய கிளைமாக்ஸ் வேறு. ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களாலும் எனது குருநாதர் பாரதிராஜாவுக்கு அது பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பதாலும் வேறு மாதிரியான கிளைமாக்ஸ் வைத்து படமாக்கி படமும் ஹிட்டானது. அந்த கிளைமாக்ஸும் பேசப்பட்டது.

ஆனால் அதே படத்தை ஹிந்தியில் அமிதாப் பச்சனை வைத்து நான் இயக்க முடிவு செய்தபோது படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பலரும் என்னிடம் வந்து தமிழில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியையே ஹிந்தியிலும் எடுங்கள். அமிதாப்பச்சனுக்கு அதுபோன்ற ஒரு கிளைமாக்ஸ் ரொம்பவே கம்பீரமாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் நான் எழுதி வைத்த கிளைமாக்ஸை படமாக்கியே தீர்வது என்று உறுதியாக இருந்தேன்.

இதுகுறித்து படத்தின் ஹீரோவான அமிதாப் பச்சனிடமே நேரடியாக பேசியபோது, அவர் என் எண்ணங்களை புரிந்துகொண்டு ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு காட்சியுடன் நீங்கள் மனதில் நினைத்து வைத்திருக்கும் ஒரு காட்சியை எப்படி ஒப்பிட முடியும். அதனால் நீங்கள் விரும்பிய கிளைமாக்ஸ் காட்சியை எடுங்கள் என ஒப்புக் கொண்டார்.

அந்த காட்சியை படமாக்கி முடித்த பின்புதான் அனைவரும் அதை பார்த்து வியந்து பாராட்டினார்கள். அந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்து விட்டு என்னுடைய குருநாதர் பாரதிராஜா வியந்து போய் என்னைப் பாராட்டினார். அப்படி ஒரு நல்ல விஷயம் வர வேண்டும் என்பதற்காக பிடிவாதமாக இருப்பது தவறில்லை.

அதேபோல யாருமே முழுதாக சினிமாவை கற்றுக்கொண்டு உள்ளே நுழைவதில்லை. பல விஷயங்களை இங்கே தான் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும். இந்தி படப்பிடிப்பின் போதும் எனக்கு பல விஷயங்கள் புரியாமலேயே அந்த சமயத்தில் அங்கே தான் கற்றுக் கொண்டு அந்த படத்தை முடித்தேன். அதுபோல இந்த படத்தின் இயக்குனர் சிவ மாதவ்வும் இந்த படத்தை தான் நினைத்தபடி மிக நேர்த்தியாக பிடிவாதமாக இருந்து செதுக்கி உள்ளார். அந்த வகையில் நிச்சயம் இந்த படம் அனைவராலும் பேசப்படும் ஒரு படமாக இருக்கும். இவ்வாறு கே.பாக்யராஜ் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.