சான் பிரான்சிஸ்கோ,
உலகின் மிகப்பிரபலமான சமூக ஊடகமான டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார் உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க்.
மேலும், ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்தார். பல ஆய்வாளர்கள் டுவிட்டர் நிறுவனத்திற்கு எலான் மஸ்க் இப்போது செலுத்தும் விலை மிக அதிகம் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், ஒப்பந்தம் முடிந்தவுடன் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டுவிட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, பராக் மற்றும் நெட் செகல் ஆகியோர் டுவிட்டர் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் இனி அங்கே திரும்பமாட்டார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில், டுவிட்டர் இணை நிறுவனர் பிஸ் ஸ்டோன், அமெரிக்க வாழ் இந்தியரான டுவிட்டர் முன்னாள் சிஇஓ பராக் அகர்வால், நெட் செகல் மற்றும் விஜய காடே ஆகியோரின் ஒருங்கிணைந்த பங்களிப்புக்காக நன்றி தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “டுவிட்டருக்காக நீங்கள்(பராக் அகர்வால், நெட் சேகல் மற்றும் விஜய காடே) வழங்கிய ஒருங்கிணைந்த பங்களிப்புக்கு நன்றி. நீங்கள் ஒவ்வொருவரும் அசாத்திய திறமைமிக்க அழகான மனிதர்கள்!” என்று பதிவிட்டார்.