சென்னை: போலி இந்தி எதிர்ப்பு நாடகத்தை விட்டுவிட்டு தமிழை வளர்க்க திமுக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழக பாஜக ஆதரவாக இருக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்மொழி வளர்ச்சிக்கு தமிழக அரசு எதுவும் செய்யவில்லை என்று கூறி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நேற்று (அக்.28) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கடலூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இந்நிலையில் திமுக சார்பில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும் இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ” நேற்று தமிழக பாஜக சார்பில் திமுகவின் போலி இந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் இந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்?
செய்வது அறியாது சிக்கித் தவிக்கும் தமிழக முதல்வர் நவம்பர் நான்காம் தேதி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க போவதாக அறிந்தேன். மக்கள் எந்த திசையை நோக்கி பயணிக்கிறார்கள் என்பது இதன் மூலமாக வெட்ட வெளிச்சமாகிவிட்டது. போலி இந்தி எதிர்ப்பு நாடகத்தை விட்டுவிட்டு தமிழை வளர்க்க திமுக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழ்நாடு பாஜக ஆதரவாக இருக்கும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்” இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை விட்டு விட்டு தமிழை வளர்க்க @arivalayam அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு @BJP4TamilNadu ஆதரவாக இருக்கும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். (3/3)
— K.Annamalai (@annamalai_k) October 28, 2022