கரூர் அருகே ஆயிரம் ஆண்டுப் பழைமையான சிவலிங்கம், நந்தி சிலை கிடைத்துள்ளது. இதனைப் பார்க்க பக்தர்கள் பரவசத்துடன் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே இருக்கும் சீத்தப்பட்டி காலனி அருகில் இருக்கிறது. அரசம்பாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான கந்தசாமி என்பவருக்கு சொந்தமான முருங்கைத் தோட்டம் ஒன்று உள்ளது. இந்த முருங்கைத் தோட்டத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த 5 அடி உயரம் உள்ள சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.
இந்தச் செய்தி அப்பகுதியில் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து, அந்த இடத்திற்குப் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிவனடியார்கள் வந்து வணங்கினர். அதேபோல், சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் வந்து சிவலிங்கம் மற்றும் நந்தியைத் தரிசித்துச் செல்கின்றனர். பூமிக்குள் புதைத்திருந்த அந்தச் சிலைகள் பொக்லைன் இயந்திரம் மூலம், வெளியே எடுக்கப்பட்டன.
தண்ணீர் ஊற்றி சிவலிங்கத்தை சுத்தப்படுத்தி பால், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் வாசனைத் திரவியங்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இந்தத் தகவலறிந்த அரவக்குறிச்சி வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், தொல்லியல் துறை அதிகாரிகள் சிதிலமைடைந்து காணப்படும் இடத்திற்கு விரைந்து சென்று சிவலிங்கத்தை மீட்டு, அது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் கோயில் இருந்திருக்கலாம் என்றும், குடகனாறு இணையும் கூடுதுறையில் நூறாண்டுகளுக்கு முன்பு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக இந்தக் கோயில் சிதிலமடைந்து இருக்கலாம் என்றும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.