ட்விட்டர் நிறுவனத்திலிருந்து வெளியேறும் பராக் அக்ரவால் வெறும் கையுடன் விடைபெறப்போவதில்லை. ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி அவருக்கு சுமார் 42 மில்லியன் டாலர்கள் கிடைக்கும்.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்து ரூ.3.5 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் செய்தார். ஆனால் திடீரென்று ஒப்பந்தத்தை ரத்து செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார். ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த விவரங்களை தராததால் ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்றார். இதையடுத்து எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக்டோபர் 28-க்குள் (இன்று) ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது.
இந்த நிலையில் எலான் மஸ்க் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று சென்றார். இதன்மூலம் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ஏற்றுக் கொண்டு விட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, ஒப்பந்தம் முடிந்து எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய கையோடு அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்த பராக் அக்ரவாலை அதிரடியாக பணி நீக்கம் செய்து எலான் மஸ்க் நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் ட்விட்டர் நிறுவனத்திலிருந்து வெளியேறும் பராக் அக்ரவால் வெறும் கையுடன் விடைபெறப்போவதில்லை. ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி அவருக்கு சுமார் 42 மில்லியன் டாலர்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பராக் அக்ரவால் ட்விட்டரில் பணியில் சேறும்போதே இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பராக் அக்ரவால் ட்விட்டர் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டால் அவருக்கு இழப்பீடாக அமெரிக்க டாலரில் 42 மில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் 345 கோடி) வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
ட்விட்டர் நிறுவனத்தில் பாரக் அக்ரவால் ஆண்டுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாய் அடிப்படை ஊதியமாக பெற்று வந்தார். தவிர ட்விட்டர் நிறுவனத்தில் ரூ.96 கோடி மதிப்பிலான பங்குகளும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. கடந்த பிப்ரவரி முதல் காலாண்டுகளில் அவருக்கு சம்பள உயர்வும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
இதையும் படிக்கலாமே: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் அதிரடி – உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM