விக்ரம் 100-வது நாள் கொண்டாட்டம்: அதிரடி ஏற்பாடுகளுடன் தயாராகும் கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஜூன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு, மிகவும் வித்தியாசமான பாணியில் கமல் ரசிகர்கள் அவரை இந்த படத்தில் கண்டனர். அதிரடி ஆக்‌ஷன் படமாக எடுக்கப்பட்ட விக்ரம் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூர்யா (கௌரவ வேடம்), பகத் பாசில், செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தது. 

பான் இந்தியா படமாக எடுக்கப்பட்ட லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.420 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதன் பாடல்களும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்கள் இடையே பெரும் பாராட்டுதல்களை பெற்றன. 

நடிகர் கமலுக்கு இது ஒரு திருப்புமுனையான படமாக அமைந்தது. இதன் வெற்றியை அவர் பல்வேறு தளங்களில் பல்வெறு விதங்களில் கொண்டாடியதை நாம் சமீப நாட்களில் பார்த்தோம். திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த விக்ரம் படம் மிகவும் வித்தியாசமான பாணியில் எடுக்கப்பட்டிருந்தது. படத்தின் முடிவில், ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் விக்ரம்-2-க்கான விதையும் போடப்பட்டுள்ளது என்றே கூறலாம். 

தற்போது விக்ரம் படத்தின் நூறாவது நாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட ராஜ்கமல் இண்டர்னேஷனல் பட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. 

அந்த அறிவிப்பில்,  “உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழாவை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் வெகுவிமர்சையாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நவம்பர் 7-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

விக்ரம் படத்தின் தயாரிப்பாளர்களான கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த வெற்றிவிழாவில், விக்ரம் படத்தில் பங்களிப்பாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்பட அனைவரும் கௌரவிக்கப்பட இருக்கின்றனர்.” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளன்று இந்த மாபெரும் கொண்டாட்ட விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.