பரிதாபாத்: ஹரியாணாவில் பல்வால் முதல் சோனிபட் வரை 126 கி.மீ. தொலைவுக்கு அரைவட்ட வடிவில் இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டம் ரூ.5,618 கோடி செலவில் மேற் கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்துக்கு அமைச்சர் அமித் ஷா நேற்று பரிதாபாத்தில் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், சோனிபட் மாவட்டம் பர்கி என்ற இடத்தில் ரூ.590 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ரயில்பெட்டி புதுப்பிக்கும் தொழிற்சாலையை அவர் காணொலி வாயிலாக திறந்துவைத்தார். ரோட்டக் நகரில்ரூ.315.40 கோடி செலவில் 6 கி.மீ.தொலைவுக்கு கட்டப்பட்டுள்ள மேம்பால ரயில் பாதை, போன்ட்சிஎன்ற இடத்தில் ரூ.106 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகள் ஆகியவற்றையும் அமித்ஷா திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “ஹரியாணா நீண்ட காலத்துக்கு பிறகுஅனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தும் முதல்வரை (மனோகர் லால் கட்டார்) பெற்றுள்ளது. இம்மாநிலத்தில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு ஊழலில் திளைத்தது. வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் முந்தைய முதல்வர்கள் பிராந்திய பாகுபாட்டுடன் செயல்பட்டனர்” என்றார்.
இந்ந நிகழ்ச்சியில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார்,துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பரிதாபாத் எம்.பி.யும் மத்திய கனரகதொழில்துறை இணை அமைச்சருமான கிரிஷன் பால் குர்ஜார், பாஜக மாநிலத் தலைவர் ஓ.பி.தன்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.