இரானில் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி, மஹ்சா அமினி என்ற 22 வயது பெண், ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கில், போலீஸ் காவலில் மர்மமான முறையில் இறந்தார். அதைத் தொடர்ந்து, ஹிஜாபுக்கு எதிரான போராட்டம் இரான் முழுவதும் வெடித்தது. இந்தப் போராட்டத்தால் இரானில் அமைதியின்மை நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு, மஹ்சா அமினி இறந்து 40 நாள்கள் ஆனதைக் குறிக்கும் வகையில் அவரது சொந்த ஊரில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்றனர்.
அவர்கள்மீது இரானிய பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, மனித உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், “ஹிஜாபுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவரும் எதிர்ப்பாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர். பொறுப்பற்ற மற்றும் சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டை, மனித உரிமைகள் தொண்டு நிறுவனம் என்கிற முறையில் கண்டிக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது
இந்த நிலையில், இரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி, “மஹ்சா அமினியின் மரணம் காரணமாக ஏற்பட்ட சீற்றத்தால் நாடு தழுவிய அமைதியின்மை நிலவுகிறது. இந்த சீற்றத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னும் தூண்டுகின்றன. இஸ்லாமிய குடியரசை நாசப்படுத்துவதற்காக அமைதியின்மையைத் தூண்டுபவர்கள் கடுமையான தண்டனைக்கு தகுதியானவர்கள்” என்று எச்சரித்திருக்கிறார்.