இஸ்லாமாபாத்,
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் வலுவான பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
ஜிம்பாப்வே அணியின் இந்த திரில் வெற்றி, பாகிஸ்தானின் தகுதிபெறும் வாய்ப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் டம்புட்ஸோ மங்காக்வா சமூக ஊடகங்களில் தங்கள் அணியைப் பாராட்டினார். அதேவேளையில், சமீப நாட்களாக இணையத்தில் புயலை கிளப்பிய போலி மிஸ்டர் பீன் நபரை குறிப்பிட்டு பாகிஸ்தானை கிண்டலடித்தார் ஜிம்பாப்வே அதிபர்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜிம்பாப்வேக்கு என்னவொரு வெற்றி! வீரர்களுக்கு வாழ்த்துகள். அடுத்த முறை உண்மையான மிஸ்டர் பீனை அனுப்புங்கள்..” என்று பதிவிட்டார்.
இதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அளித்துள்ள பதிலில், “எங்களிடம் உண்மையான மிஸ்டர் பீன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் எங்களிடம் உண்மையான கிரிக்கெட் ஆர்வம் இருக்கிறது. திரும்பி மீண்டு வரும் கேளிகையான பழக்கம் பாகிஸ்தானியர்களிடம் உண்டு. வாழ்த்துக்கள், இன்று உங்கள் அணி நன்றாக விளையாடியது” என்று டுவிட்டரில் பதிவிட்டார்.