கொல்கத்தா: வருகின்ற 2024ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய புலனாய்வு முகமை அலுவலகம் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அரியானாவின் சூரஜ்கண்டில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்களுக்காக 2 நாள் சிந்தனை முகாம் நடந்து வருகின்றது. இதனை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். இதில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகின்றார்.
நேற்று நடந்த மாநாட்டில் அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: சைபர் கிரைம், போதைப்பொருள், எல்லை தாண்டிய தீவிரவாதம், தேசத்துரோகம் மற்றும் பிற குற்றங்களை திறம்பட கையாள்வது மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசின் கூட்டுப்பொறுப்பாகும். நமது அரசியலமைப்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு என்பது மாநில பாடமாகும். 3சி ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, கூட்டாக செயலாற்றுதல் ஆகியவற்றுக்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும். தேசிய புலனாய்வு முகமைகளுக்கு மற்ற அதிகாரங்களுடன் பிராந்திய அதிகார வரம்பும் வழங்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய புலனாய்வு முகமை கிளையை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. எல்லைக்கு அப்பாற்பட்ட அதிகார வரம்பு வழங்கப்பட்டுள்ளதோடு, தீவிரவாதிகளின் சொத்துக்களை கைப்பற்றும் அதிகாரமும் உள்ளது. வலுவான தீவிரவாத எதிர்ப்பு வலையமைப்பை உருவாக்குவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தேசிய புலனாய்வு முகமை பிரிவு இருக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
* மம்தா புறக்கணிப்பு
அரியானாவில் நடக்கும் உள்துறை அமைச்சர்களுக்கான சிந்தனை முகாமில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்க மாநில மூத்த அரசு அதிகாரி கூறுகையில், ‘இது விழாக்காலம். இந்த நேரத்தில் முதல்வர் மாநிலத்தை விட்டு வெளிநிகழ்ச்சிக்கு செல்வது இயலாது. இதே காரணங்களுக்காக உள்துறை செயலாளர், டிஜிபியும் சிந்தன் சிவிர் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாது. இதனால், மேற்கு வங்கம் சார்பாக கூடுதல் இயக்குனர் ஜெனரல் நீரஜ் குமார் சிங், டெல்லியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி ராம்தாஸ் மீனா ஆகியோர் பங்கேற்பர்’ என தெரிவித்துள்ளார்.