ஜோஹார்,
6 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது ஜோஹார் கோப்பைக்கான சர்வதேச ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 5-5 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இந்திய அணியில் பூவன்னா 7-வது நிமிடத்திலும், அமன்தீப் 50-வது நிமிடத்திலும், அரிஜீத் சிங் 53-வது நிமிடத்திலும், ஷர்தாநந்த் திவாரி 56-வது மற்றும் 58-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் மேக்ஸ் ஆண்டர்சன் 1-வது மற்றும் 40-வது நிமிடத்திலும், ஹாரிசன் ஸ்டோன் 42-வது நிமிடத்திலும், ஜாமி கோல்டன் 54-வது மற்றும் 56-வது நிமிடத்திலும் கோல் போட்டனர்.
லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா அணி 13 புள்ளிகளுடன் (4 வெற்றி, ஒரு டிரா) முதலிடமும், இந்தியா 8 புள்ளிகளுடன் (2 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து இறுதிசுற்றை எட்டின.
இங்கிலாந்து (7 புள்ளி) 3-வது இடமும், ஜப்பான் (7 புள்ளி) 4-வது இடமும், தென்ஆப்பிரிக்கா (6 புள்ளி) 5-வது இடமும் பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. போட்டியை நடத்தும் மலேசியா (1 புள்ளி) கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.
இதையடுத்து இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.