திருப்பதி : திருப்பதி மாவட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளது என்று கலெக்டர் வெங்கடரமணா தெரிவித்துள்ளார்.
திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் தொழில் ஏற்றுமதி மேம்பாட்டு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் வெங்கடரமணா தலைமை தாங்கினார்.
அப்போது, அவர் பேசியதாவது:
பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தை மேம்படுத்துதல், வங்கிகள் அவர்களுக்கு கடன் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சித்தூரிலிருந்து பிரிந்து திருப்பதி தனி மாவட்டமாக உருவானதில் இருந்து இதுவரை 332 தொழிற்சாலைகளுக்கு 319 அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 13 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. தொழில்துறை ஆய்வு குழுவால் பெறப்பட்ட பரிந்துரைகளின்படி 66 தொழிற்சாலைகளுக்கு ₹3.43 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டு மானியம் 12, மின்சார மானியம் 30, வட்டி மானியம் 19, எஸ்ஜிஎஸ்டி 1, முத்திரைத்தாள் 2, நில மாற்றம் 1, நில விலை 1 தொழில்கள் இதில் அடங்கும்.
சிடிபி திட்டத்தின்கீழ் காளஹஸ்தி, குண்டகிண்டப்பள்ளி மற்றும் திருமண்யத்தில் உள்ள கைவினை பொருட்கள் கிளஸ்டர் ஆகியவற்றில் பிரிண்டிங் கிளஸ்டர்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் ரியல் டைம் ஜிஎஸ்டி தகவல் பரிமாற்றத்திற்கு ஆண்ட்ராய்டு செயலி கிடைக்கும். ஆகஸ்ட் மாத நிலவரப்படி திருப்பதி மாவட்டத்தில் இருந்து ₹6,774 கோடிக்கு தொழில்துறை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இக்குழு மாவட்டத்தில் தொழிற்சாலை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதுகாப்பு அளவீடு குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீர் வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இன்று வரை 28 தொழிற்சாலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் தொடர்பான அனுமதிகள் தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளிடம் நிலுவையில் உள்ள பிரச்னைகளை விரைந்து தீர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.