கிரிக்கெட் உலகில் கோலோச்சிய தோனி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பிஸ்னஸில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்த அவர், இப்போது புதிதாக சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். தோனி எண்டர்டெயின்மென்ட் என பெயரிடப்பட்டிருக்கும் அந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் விஜய் அல்லது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நடிக்கக்கூடும் என தகவல் பரவியது. இதற்கு முக்கிய காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்தபோது விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்திருந்தார் தோனி.
இதனால், அவர்கள் படங்களில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவியது. பின்னர் தோனி சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதாக அறிவிப்பு வெளியானவுடன், அவர்களை தங்கள் நிறுவனத்தின் முதல் படத்தில் நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்ற தகவலும் பரவியது. ஆனால் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தோனி தயாரிக்கும் முதல் படத்தின் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க இருக்கிறாராம். விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் அவர், தோனி தமிழில் தயாரிக்கும் முதல் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம்.
படத்தை ரமேஷ் தமிழ் மணி இயக்க இருக்கிறார். ஹீரோயினாக பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அவருக்கும் தோனி தயாரிக்கும் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துவிட்டதால் அடுத்தக்கட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.