குஜராத் மாநிலம், சவர்குண்ட்லா கிராமத்தில் வசிக்கும் மக்கள் வித்தியாசமான முறையில் பட்டாசுகளை தயாரிக்கின்றனர். இது அவர்களது 100 வருட பழமையான பழக்ககமாகும்.
இப்பகுதியில் சவர் மற்றும் குண்ட்லா என இருபிரிவு கிராம மக்கள் உள்ளனர். தீபாவளி சமயங்களில் ஒருவர் மீது ஒருவர் பட்டாசுகளை எறிந்து விளையாடுவதே இவர்களின் பொழுதுபோக்கு. இதற்கான பட்டாசுகளை இவர்களே தயாரிக்கிறார்கள் என்பது தான் ஆச்சர்யம்.
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் நிலேஷ் மேத்தா கூறியதாவது, “தீபாவளிக்கு பதினைந்து நாட்கள் முன்பே இதற்கான பணிகளைத் தொடங்கிவிடுவோம். இப்பகுதியில் அதிகமாக விளையும் “இங்கோரா” எனும் பழத்தை சில நாட்களுக்கு முன்பிருந்தே சேகரிக்கத் தொடங்கிவிடுவோம். பின்பு அப்பழத்தை நன்கு உலர வைத்து, அதில் சில வெடி மருந்துகளைப் போட்டு மீண்டும் உலர வைத்து தயார் செய்வோம். இதில் தீ வைத்து எதிரிலுள்ளவர்கள் மீது தூக்கிப் போடுவதன் மூலம் இதனை பட்டாசு போல வெடிக்க வைக்கிறோம். உண்மையில் இது வெடிக்காது, தீ மட்டுமே வரும்” என்றார்.
இரு பிரிவு மக்களும் அங்குள்ள நதியின் இரு கரைகளிலும், எதிரெதிர் திசைகளில் நின்றுகொண்டு, ஒருவர் மீது ஒருவர், இங்கோரா பழத்தை வீசி பட்டாசுகளை வெடிக்க வைக்கிறார்கள். இது உடலில் பட்டாலும் பெரியளவில் காயங்களை ஏற்படுத்துவதில்லை. ஏற்படும் சிறிய காயங்களையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. தங்களது பாரம்பரிய பழக்கத்தை வெகு உற்சகமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், உலகின் எந்த மூலையிலிருந்தாலும் இந்த பண்டிகையின் போது கிராமத்தில் ஆஜராகிவிடுவது, இவ்விழாவின் கூடுதல் சிறப்பு..!