ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தில் 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடன் தொடர்பான பிரச்னைகள் மற்றும் சொத்து தகராறுகளைத் தீர்ப்பதற்காக, சாதிப் பஞ்சாயத்துகள் நடத்தப்படுகிறது. அவ்வாறு பஞ்சாயத்துகள் நடத்தப்படும் போது, கொடுத்த கடனை திருப்பி தராத குடும்பத்தினரின் பெண் குழந்தைகளை ஏலம் விடுகின்றனர்.
அதுமட்டுமின்றி, சொத்து தகராறில் தோற்கும் தரப்பின் மகள்கள் ஏலம் விடப்படுகின்றனர். இந்த ஏலத்தை சட்டப்பூர்வமாக்க முத்திரைத் தாள்களும் பயன்படுத்தப்படுகின்றன.இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு விபச்சார விடுதிகளுக்கு பெண்களை கைமாற்றி விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, சிறுமிகளை ஏலம் விடுவதைத் தடுத்தால், அவர்களின் தாய்மார்கள் பலாத்காரம் செய்யப்படுவார்கள் என்ற நிபந்தனையும் உள்ளது.அந்த வகையில் ஒரு தாய் ரூ.6 லட்சத்திற்காக தனது மகளை 3 முறை விற்ற நிலையில், சிறுமி 4 முறை கர்ப்பமானது தெரியவந்துள்ளது.
இது குறித்து பொதுவெளியில் தெரியவர, ஊடகங்களில் இருந்து இதுபோன்ற செய்திகள் வந்ததையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்தது.
இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இதுபோன்ற கொடூரமான சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ராஜஸ்தான் தலைமைச் செயலருக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறியதாவது:-
2005-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. ஆனால் 2019இல், காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் அதை அம்பலப்படுத்தினோம். இந்த சம்பவம் தொடர்பாக 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர், அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் தலைமறைவானார். மீட்கப்பட்ட குழந்தைகளில், 2 குழந்தைகள் இறந்தனர், மீதமுள்ளவர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
பாஜக செயற்கையாக உருவாக்கிய சர்ச்சை இப்போது அடித்து நொறுக்கப்படுகிறது. வரும் தேர்தலில் போட்டியிட பாஜகவுக்கு வேட்பாளர்கள் இல்லை. அவர்களின் தந்திரங்களை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். பாஜக பாசிசத்தை நம்புகிறது. பாஜக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஜனநாயகத்தின் முகமூடியை அணிந்து கொண்டு செயல்படுகிறது.ஆனால் காங்கிரஸ் தேர்தல் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.