வால்பாறை : வால்பாறை பூங்காவை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.வால்பாறை காமராஜ் நகர் பொதுப்பணித்துறை வசம் உள்ள காலி இடத்தில், வால்பாறை நகராட்சியால் 4.26 ஏக்கர் பரப்பளவில், ரூ. 2.58 கோடி செலவில் தாவிரவியல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.
புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி இடத்தில் 4.2 ஏக்கர் பரப்பில், ரூ. 3.47 கோடி மதிப்பீட்டில் படகு விட, தடுப்பு அணை அமைக்கும் பணியும் முடிந்துள்ளது. முடிந்தும் பலமாதம் ஆகியுள்ள நிலையில், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பூங்காவில் மேம்பாட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூங்காவில் சிசிடிவி, போலீஸ் பூத் ஆகியவை அமைத்து, பாதுகாப்பை உறுதி செய்ய சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.