அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக பேசுவதாக இருந்தால், பதவியில் இருந்து விலகிவிட்டு கருத்துக்களை சொல்லாம். பொறுப்பில் இருந்து கொண்டு சனாதன கருத்துக்களை பேசுவது இனியாவது ஆளுநர் நிறுத்துக்கொள்ள வேண்டும் என ஆர்.என்.ரவிக்கு திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, திமுக. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
அந்த கண்டன அறிக்கையில், “பொறுப்பில் இருந்துக் கொண்டு பேசுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக் கொள்ள வேண்டும். பெரிய பதவி எதையாவது எதிர்பார்த்து பாஜக தலைமையை மகிழ்விக்க ஆளுநர் விரும்பினால் அவர் பதவி விலக வேண்டும். ஆளுநர் உதிர்க்கும் அபத்த கருத்துகளுக்கு எதிராகப் பலர் சொல்லும் விளக்கங்களை அவர் ஏற்றதாக தெரியவில்லை. ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவது அவர் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கே எதிரானது என்பதை உணர்ந்து தான் பேசுகிறாரா? வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தும் எண்ணத்தோடு ஆளுநர் பேசுகிறார் என்றே பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது.