இதோ வெள்ளி கவசம்… தெற்கில் இனி ஓபிஎஸ் கொடி… தேவர் ஜெயந்தியில் பெரிய ட்விஸ்ட்!

அரசியல் மட்டுமின்றி ஆன்மீகத்திலும் கொடிகட்டி பறந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். இவர் தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் பிரபலமானவர். தேர்தல் அரசியலை பொறுத்தவரை தென் தமிழகத்தில் முத்துராமலிங்கை தேவரும் மற்றும் அவர் சார்ந்த சமூகத்தினரின் வாக்கு வங்கியும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனவே தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜைக்கு அரசியல் கட்சிகள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றன. தேவர் ஜெயந்தியை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அரசு விழாவாக அறிவித்தார்.

தேவருக்கு கருணாநிதி மணி மண்டபம் கட்டிக் கொடுத்தார். இதையடுத்து 13 கிலோ தங்க கவசத்தை காணிக்கையாக கொடுத்தார் ஜெயலலிதா. இப்படி அதிமுகவும், திமுகவும் முத்துராமலிங்க தேவருக்கு மாறி மாறி மரியாதை செலுத்தி வந்துள்ளன. இதில் தேவர் ஜெயந்தியை ஒட்டி அதிமுக சார்பில் அணிவிக்கப்படும் தங்க கவசம் தான் ஹைலைட். இதனை பொருளாளர்

தான் வங்கியில் இருந்து முறைப்படி பெற்று வந்து தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் ஒப்படைப்பார். அவர்கள் தேவருக்கு கவசத்தை அணிவித்து விழாவை கொண்டாடுவர்.

பின்னர் மீண்டும் பொருளாளரிடம் ஒப்படைத்து, வங்கியில் ஒப்படைக்கப்படும். தற்போது உட்கட்சி பூசலால் அதிமுக பிளவுபட்டிருக்கும் சூழலில் தங்க கவச விவகாரம் நீதிமன்ற கதவுகளை தட்டியது. அதில் எடப்பாடி தரப்பிற்கும் கிடையாது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கும் கிடையாது எனக் கூறி டி.ஆர்.ஓவிடம் ஒப்படைத்து உத்தரவிடப்பட்டது. அதன்படி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேவர் ஜெயந்திக்கு எடப்பாடி பழனிசாமி வராமல் கட்சியின் மூத்த நிர்வாகிகளை பசும்பொன்னிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று மரியாதை செலுத்த முடிவு செய்துள்ளார்.

தங்க கவசம் இல்லாமல் வெறும் கையுடன் செல்வதை பின்னடைவாக கருதிய ஓபிஎஸ், புதிய வியூகம் வகுத்துள்ளார். இது எடப்பாடி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமின்றி, ஒட்டுமொத்த அதிமுக ரத்ததத்தின் ரத்தங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அப்படியென்ன செய்திருக்கிறார் என்று கேட்கிறீர்களா? இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 115வது பிறந்த நாள் மற்றும் 60 வது குருபூஜை நாளில்

புரட்சித் தலைவர் ஜெயலலிதா நினைவாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் திருவுருவச் சிலைக்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி மற்றும் இதர சுப நாட்களில் வெள்ளிக் கவசம் அணிவிக்கப்படும். இதற்காக 10 கிலோ 400 கிராம எடை கொண்ட வெள்ளி கவசத்தை தேவர் நினைவிடக் காப்பாளர் ந.காந்தி மீனாள் அவர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (அக்டோபர் 30) வழங்கி மரியாதை செலுத்துவார் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் தென் மாவட்ட மக்களின் மனதில் ஓபிஎஸ் தனியிடம் பிடித்துவிட்டார். தெற்கில் கொடி நாட்டலாம் என்ற எடப்பாடி பழனிசாமி எண்ணத்தை தவிடு பொடியாக்கி ஓபிஎஸ் தனது கொடியை நாட்டிவிட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் தேர்தல் அரசியலில் யாருக்கு பெரும்பான்மை என்பது தான் வெற்றியை தீர்மானிக்கும். உரிய அந்தஸ்தையும் பெற்று தரும். இந்த விஷயத்தில் ஓபிஎஸ் ஜெயிப்பாரா? என்பதை அடுத்து வரும் தேர்தல்கள் தான் முடிவு செய்யப் போகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.