இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் சர்வதேச மாநாடு: நாளை தொடக்கம்!

இந்திய தேர்தல் ஆணையம் ‘தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் பங்கு, கட்டமைப்பு மற்றும் திறன்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை டெல்லியில் நடத்துகிறது. அக்டோபர் 31, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரண்டு நாள் மாநாட்டை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தொடங்கி வைக்கிறார். நிறைவு அமர்வுக்கு தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே தலைமை தாங்குகிறார்.

‘தேர்தல் நேர்மை ‘ குறித்த கூட்டமைப்பிற்கான தலைமைப் பொறுப்பு வகிக்கும் தேர்தல் ஆணையம், ஒரு கூட்டு அணுகுமுறையை மேற்கொள்ள கிரீஸ், மொரீஷியஸ் மற்றும் ஐஎப்இஎஸ் ஆகியவற்றை இணைத் தலைவர்களாக இருக்க அழைப்பு விடுத்துள்ளது. உலகெங்கிலும் தேர்தல்களை நடத்துவது தொடர்பான தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் அரசுப் பிரதிநிதிகளைத் தவிர, யுஎன்டிபி போன்ற அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்மீனியா, மொரிஷியஸ், நேபாளம், கபோ வெர்டே, ஆஸ்திரேலியா, சிலி, ஃபெடரல் ஸ்டேட்ஸ் ஆஃப் மைக்ரோனேசியா, கிரீஸ், பிலிப்பைன்ஸ், சாவோ டோம், பிரின்சிப், அமெரிக்கா மற்றும் மூன்று சர்வதேச அமைப்புகளான ஐடிஇஏஇஎஸ், ஐஎப்இஎஸ், யுஎன்டிபி உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த 50 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பல நாடுகள் டெல்லியில் உள்ள அவர்களது தூதரகங்களை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு அமர்வுகளில், ‘தேர்தல் நேர்மையை’ உறுதி செய்வதற்காக, இஎம்பி-களின் பங்கு மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து, தற்போதைய மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து விவாதிக்கப்படும். தொடக்க அமர்வு தலைமை உரை ஆற்றும் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெறும். நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் மாநாட்டின் நிறைவு அமர்வில், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே உரையாற்றவுள்ளார். டெல்லிக்கு பிரதிநிதிகளை அனுப்ப முடியாத பங்குதாரர்களுக்காக சிறப்பு மெய்நிகர் அமர்வு நவம்பர் 1ஆம் தேதி மாலை 6:00 மணிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.