சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஒதுக்கீட்டை முறைப்படுத்த நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சிகளின் கடைகளை வாடகைக்கு விடுதல், காலி நிலத்தை குத்தகைக்கு விடுதல் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ் தாஸ் மீனா தலைமையில் 8 உறுப்பினர்களைக் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தலைவராகவும், சென்னை மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர் (வருவாய்), பேரூராட்சிகள் ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குநரக இணை ஆணையர், பேரூராட்சி ஆணையரக இணைய ஆணையர் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் என்ற முறையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, வேலூர் மாவட்டத் தலைவர் இரா.ப.ஞானவேல் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழு, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்களுக்கான குத்தகை இனங்களுக்கு நியாயமான வாடகை மற்றும் இடத்துக்கேற்ற முன்வைப்புத் தொகை நிர்ணயம் செய்ய உதவுதல், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சொந்தமான வருவாய் ஈட்டும் சொத்துகளை ஏலம் விடுவது குறித்த வழிமுறைகள் வகுப்பது, குத்தகை, வாடகை மறு நிர்ணயம் செய்தலுக்கு கால இடைவெளி அளவை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வணிகர் சங்க பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதற்காக, முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நன்றி தெரிவித்துள்ளார்.