பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். தாம் தூம், தலைவி போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அண்மைக்காலமாக இவர் பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருவதுடன், பிரதமர் மோடியை புகழ்ந்தும் பேசி வருகிறார். சில சமயங்களில் இவரது கருத்துகள் அரசியல் ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
இந்த நிலையில், அரசியல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கங்கனா ரனாவத், பாஜக சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிட தயார் என தெரிவித்துள்ளார். மக்கள் விரும்பினால் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மண்டி தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
நடிகை கங்கனா ரனாவத்தின் அரசியல் பிரவேசம் பற்றியும், பாஜக சார்பாக அவர் போட்டியிட விரும்புவது பற்றியும் இமாச்சலப் பிரதேச தேர்தல் பிரசாரத்துக்கான சிம்லா சென்றுள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கங்கனா ரனாவத் பாஜகவிற்கு வருவதை வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜே.பி. நட்டா, “கட்சிக்காக யார் உழைக்க விரும்பினாலும் அவர்களுக்கு பாஜக இடமளிக்கும். அந்த வகையில் கங்கனா ரனாவத்தை வரவேற்கிறோம். ஆனால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவது என்பது நான் ஒருவன் எடுக்கும் முடிவல்ல. அடிமட்ட தொண்டர்கள் தொடங்கி, நாடாளுமன்ற குழு வரை அனைவரிடமும் ஆலோசனை செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும். யார் வேண்டுமானாலும் பாஜகவுக்கு வராலம், ஆனால் அவர்களின் வலிமை என்ன என்பதை கட்சிதான் முடிவு செய்யும்.” என்றார்.
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி, மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போது இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. எதிர்வரவுள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அம்மாநிலத்தில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.