கோவை: கல்லூரி நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது ஆளுநருக்கு ஏற்புடையதல்ல என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கோவையில் கடையடைப்பு போராட்டம் தொடர்பாக கட்சி தலைமைக்கு தெரியாமலேயே பாஜக மாவட்ட நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் தனக்கும், இப்போராட்டத்துக்கும் தொடர்பில்லை என பாஜக தலைமை கூறியிருப்பது முறையல்ல. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி.
அவரை பற்றி என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம். கல்லூரி நிகழ்ச்சியில் ஆளுநர் அரசியல் பேசுவது ஏற்புடையது அல்ல. அனைத்து அதிகாரமும் உள்ள ஆளுநரே, டிஜிபி, தலைமை செயலாளரை அழைத்துப் பேசி, கார் வெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ. விசாரணைக்கு அவரே பரிந்துரை செய்திருக்கலாம். 4 நாட்களுக்குப் பிறகு அரசியல் பேச வேண்டும் என்ற நோக்கில் ஆளுநர் பேசியுள்ளார்.
இவ்வழக்கை, கோவை காவல்துறை மிகத் திறமையாக கையாண்டுள்ளது. காஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்துக்கு பின்னர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மிக விரைவாக நடவடிக்கை எடுத்ததாக தொழில் முனைவோர் பலரும் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் பாஜகவினர் அரசியல் ஆதாயம் தேடுவது எடுபடாது, என்றார்.