புதுவை மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 2014-ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றபோது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக அறிவித்தார். அதன்படி கடந்த 8 ஆண்டுகளில் 16 கோடி பேருக்கு அவர் வேலைவாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 50 லட்சம் பேருக்குக்கூட வழங்கவில்லை. அதை மறைக்கும்விதமாக புதிதாக 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கினார் பிரதமர். அதில் முதற்கட்டமாக 75,000 பேருக்கு நாடு முழுவதும் மத்திய அரசு பணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. புதுவையில் 57 பேருக்கு வேலை வழங்க பல லட்சம் ரூபாய் செலவு செய்து விழா எடுத்தனர். அர்த்தமில்லாத விழாவாக கேலிக்கூத்தாக நடத்தப்பட்டுள்ளது.
வரும் டிசம்பருக்குள் புதுவை அரசின் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். அரசு விதிமுறைகளோடு 10,000 பணியிடங்களை டிசம்பருக்குள் நிரப்ப முடியுமா? அப்படி நிரப்பாவிட்டால் சபாநாயகரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக தயாரா? மத்திய அரசு ரூ.1,400 கோடி நிதி அளித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். அதில் ஜி.எஸ்.டி இழப்பீடு ரூ.700 கோடி, 7-வது சம்பள கமிஷனுக்கு ரூ.160 கோடி போக மீதமான தொகையை மத்திய அரசு புதுவைக்கு கொடையாக வழங்கியுள்ளதா? இல்லை கடனா? இதுபற்றி முதலமைச்சர் பொதுமக்களுக்கு பகிரங்கமாக விளக்க வேண்டும். அமைச்சர்களும், சபாநாயகரும் அரைவேக்காட்டுதனமாக பேசுவதை நிறுத்த வேண்டும். 2021-ம் ஆண்டு ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்கும்போது, கூட்டுறவு நிறுவனங்களில் வாங்கிய விவசாயிகள் கடன் ரத்து செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவித்தார்.
மீண்டும் அதே அறிவிப்பை 2022 பட்ஜெட்டிலும் வெளியிட்டார். இரண்டு ஆண்டுகள் தாண்டியும் இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரவில்லை. விவசாயிகள் சம்பா நடவுக்கு தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு புதிய கடனை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும். வெற்று அறிவிப்புகளை வெளியிடும் அரசாக புதுவை அரசு உள்ளது. புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கேலிக்கூத்து அரங்கேறியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் அந்த உத்தரவை இரண்டே மணிநேரத்தில் ரத்து செய்துள்ளார் கவர்னர். அதில் மர்மமும், பின்னணியும் உள்ளது. இது குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். புதுச்சேரியில் 10 பேர் கொண்ட வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் கடையை திறந்து வைக்கலாம் என தொழில்துறை கூறியுள்ளது.
மதுபான கடைக்கும் அது பொருந்துமா? எந்தெந்த கடைகளை திறக்கலாம் என்பது தொடர்பான அறிவிப்பு இல்லை. ஏற்கெனவே புதுச்சேரியில் சாராய ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. 24 மணி நேரமும் மதுபான கடையை திறந்துவிட்டால் புதுச்சேரி சாராய கடலாக மாறிவிடும். 24 மணிநேரம் கடையை திறந்தால் யார் பாதுகாப்பு கொடுப்பார்கள்? தமிழகத்தில் கோவையில் நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. இவ்விஷயத்தில் தமிழக அரசு துரிதமாகச் செயல்பட்டு நடவடிக்கை எடுத்தது. ஆனால், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் லாபம் அடைய பார்க்கிறார். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்து ஏன் அவர்கள் பேசுவதில்லை? பா.ஜ.க தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் மக்களின் அபிமானத்தை பெற முடியாது. பா.ஜ.க-வின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார்.