குஜராத் முதல்வர் வேட்பாளர் யார்?.. கெஜ்ரிவால் கருத்து கணிப்பு

புதுடெல்லி: குஜராத்தில் ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என இம்மாநில மக்களிடம் கெஜ்ரிவால் கருத்து கேட்டுள்ளார்.
குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில், கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தொடர்ந்து ஆட்சி செய்து வரும் பாஜ., மீண்டும் ஆட்சியை தக்கவைக்க முயன்று வருகிறது. ஆனால், அதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. இக்கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், இந்த மாநிலத்துக்கு அடிக்கடி சென்று பிரசாரம் செய்வது மட்டுமின்றி, பாஜ.வுக்கு தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

பாஜ.வின்  இந்து ஆதரவு கொள்கையை தகர்க்கும் வகையில், ரூபாய் நோட்டுகளில் இந்து கடவுள்களான விநாயகர், லட்சுமி படங்களை அச்சடிக்கும்படி மோடிக்கு சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், குஜராத்தில் ஆம் ஆத்மி சார்பில் யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து, இம்மாநில மக்களிடம் கெஜ்ரிவால் கருத்து கேட்டுள்ளார்.

இதற்காக, 6357000360 என்ற செல்போன் எண்ணையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த எண்ணில் போன் செய்தும், வாட்ஸ் அப் மூலமும் முதல்வர் வேட்பாளர் பெயரை நவம்பர் 3ம் தேதி மாலை வரை பரிந்துரைக்கும்படி அவர் கேட்டுள்ளார். இந்த கருத்து கேட்பு முடிந்ததும் மறுநாளே முதல்வர் வேட்பாளர் பெயரை அவர் அறிவிக்க உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.