குறிப்பிட்ட மனிதர்களை குறி வைத்து கடிக்கும் கொசுக்கள்…!! விஞ்ஞானிகளின் ஆய்வில் புது தகவல்

வாஷிங்டன்,

உலக அளவில் ஆண்டுதோறும் அதிக மனித உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடிய உயிரினம் என அறியப்படுபவை கொசுக்கள். இவற்றில் ஏடிஸ் எகிப்தி என்ற கொசுக்கள் இனம் ஜிகா, டெங்கு, மஞ்சள் காய்ச்சல் மற்றும் சிக்குன்குன்யா உள்ளிட்ட வியாதிகளை பரப்ப கூடியது.

கொசுக்கள் அனைத்து மனிதர்களையும் வேட்டையாட கூடிய திறன் பெற்றவை என்றபோதிலும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் குறி வைத்து கடிப்பதற்கான காரணம் என்ன? என்பது பற்றி அறிவதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

இதன்படி, தி ராக்பெல்லர் பல்கலை கழகத்தின் விஞ்ஞானிகளான வோஷால் மற்றும் மரியா எலினா ஆகியோர் ஒரு சிலரை வைத்து பல ஆண்டுகால ஆய்வில் ஈடுபட்டனர். இதில், இரு பிரிவில் ஒரு பிரிவை நோக்கி மட்டுமே ஆய்வில் விடப்பட்ட கொசுக்கள் விரும்பி தேடி சென்றுள்ளன.

இதுபற்றிய ஆய்வின் முடிவில், ஒரு குறிப்பிட்ட வகையான கார்பாக்சிலிக் அமிலங்களை அதிக அளவில் உற்பத்தி செய்பவர்களால் கவரப்பட்டு கொசுக்கள் செல்கின்றன. இந்த அமிலங்கள், நம்முடைய தோலின் மேற்பரப்பில் ஈரம் தடுப்பானாக செயல்படும் சீபம் எனப்படும் பொருளில் உள்ளது.

இதனை தோலில் உள்ள பாக்டீரியாக்கள் உபயோகித்து கொள்கின்றன. அதன்பின்பு, நமது உடலில் இருந்து தனித்தன்மை கொண்ட மணம் வெளிப்படுகிறது.

இதனை கண்டறிந்து, கொசுக்கள் அவர்களை தேடி செல்வது ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனினும், ஆய்வின் நோக்கம் மனிதர்களை நோக்கி கவர கூடிய அனைத்து விசயங்களையும் கொசுக்கள் இழக்க வேண்டும்.

அல்லது அவற்றால் மனிதர்களை நோக்கி கவர முடியாமல் போவது ஆகியவை ஏற்பட வேண்டும் என்பதே விஞ்ஞானிகளின் நம்பிக்கையாக இருந்தது. அவற்றை கண்டுபிடிக்க முடியாதது சற்று வருத்தமே என அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

ஏனெனில் பெண் கொசுக்கள் வாழ்வதற்கு மற்றும் இனப்பெருக்கத்திற்காக ரத்தம் தேவைப்படுகிறது. அது இல்லாமல் பெண் கொசுக்களால் எதுவும் செய்ய முடியாது.

அதனால், கொசுக்களின் மணம் கண்டறியும் பண்பு உறுதியாக உள்ள சூழலில், அவற்றின் உணவு பட்டியலில் முதல் இடத்தில் மனிதர்கள் உள்ளனர்.

எனினும், இந்த ஆய்வானது, மலேரியாவை பரப்ப கூடிய அனாபிலிஸ் போன்ற பிற கொசு இனங்களை பற்றிய ஆய்வாளர்களின் பரிசோதனைக்கு உந்துதலாக இருக்கும் என ஆய்வாளர் வோஷால் கூறுகிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.