நாமக்கல்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள வாத்துப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநர் (பொ) பாஸ்கரன் கூறியதாவது: நாமக்கல் கோழிப் பண்ணைகளை கண்காணிக்க 45 அதிவிரைவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவில் கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் ஆகியோர் உள்ளனர். இக்குழுவினர் கோழிப் பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதை பார்வையிடுவர். மேலும், நோய் பரவாமல் இருக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வர் என்றார்.
நாமக்கல்லைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பாலாஜி கூறியது: பரிசோதனை மையம் தேவை: கடந்த 2 ஆண்டில் 3 முறை கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நோய் பாதிப்புக்கு உள்ளான வாத்துகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி முடிவுகள் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.
இப்பரிசோதனை மையத்தை தென்னிந்தியாவில் குறிப்பாக கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ள நாமக்கல்லில் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் பாதிப்பு ஏற்படும் சமயங்களில் முடிவுகளை விரைந்து பெற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடியும் என்றார்.