கோவை: கோவை கார் வெடிப்பு தொடர்பாக சம்பவ இடத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள், சங்கமேஸ்வரர் கோயில் அர்ச்சகரிடம் விசாரணை நடத்தினர்.
கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ம் தேதி அதிகாலை கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த கோட்டைமேட்டைச் சேர்ந்த ஜமேஷா முபின் உயிர் இழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் விசாரித்து ஆறு பேரை கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் டிஐஜி வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் தலைமையில் அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் என்ஐஏ அதிகாரிகளிடம் தமிழக போலீசாரால் ஒப்படைக்கப்பட்டன. இந்தச் சூழலில் எஸ்.பி ஸ்ரீஜித் தலைமையிலான என்ஐஏ அதிகாரிகள் கார் வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டைமேடு பகுதிக்கு இன்று காலை வந்தனர். கார் வெடிப்பு சம்பவம் நடந்த பகுதியை ஆய்வு செய்தனர்.சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீஸார், என்ஐஏ அதிகாரிகளுக்கு விளக்கினர்.
விபத்து நடந்த இடம், அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகள் போன்றவற்றை என்.ஐ.ஏ அதிகாரிகள் பார்வையிட்டனர். விபத்தால் சேதமடைந்த கோயிலின் முன்பகுதியையும் அவர்கள் பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கின் புகார்தாரரான கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் பூசாரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. என்ஐஏ அதிகாரிகளின் ஆய்வு காரணமாக அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.