கோவை கார் வெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ. இன்று விசாரணை: ஆவணங்களை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்தது காவல்துறை

கோவை; கோவை கார் வெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை இன்று விசாரணையை தொடங்க உள்ளது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தேசிய புலனாய்வு முகமையிடம் காவல்துறை ஒப்படைத்துள்ளது. உக்கடம் அருகே கடந்த 23-ம் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதில் காரில் இருந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

 மாநிலம் கடந்து விசாரிக்கப்பட வேண்டும்  என்பதால் இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.இதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் டிஐஜி வந்தனா தலைமையில் கோவையில் முகாமிட்டு ஆரம்பகட்ட விசாரணை தொடங்கினர். கோவையில் என்.ஐ.ஏ.வுக்கு அலுவலகம் இல்லாததால் கோவை ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் தேசிய புலனாய்வு முகமைக்கு இரண்டு அறைகளுடன் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் 6 பேர் ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டனர். கார் வெடிப்பு தொடர்பான ஆவணங்கள் மற்றும் தடயங்களை என்.ஐ.ஏ.அதிகாரிகளிடம் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஒப்படைத்தார். சம்பவ இடத்தில் இருந்து இன்று விசாரணையை  தொடங்கும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைதான 6 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிப்பது, கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிகிறது.

இதனிடையே கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபின் சம்பவம் நடந்த பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்பு வரை வீடு வடகைக்கு எடுத்து தங்கியிருந்தது அம்பலமாகியுள்ளது. ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது வீட்டின் ஜமேஷா முபின் தங்கியிருந்ததை வீட்டின் உரிமையாளர் அப்துல் மஜித் உறுதிபடுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.