நெல்லை மாவட்டம் பனங்குடி அருகே இசக்கிமுத்து என்பவர் கடந்த 23ம் தேதி அனுமன் நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர்களின் குடும்பத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிவாரண நிதியை இசக்கி முத்துவின் வீட்டிற்கு நேரில் சென்று சபாநாயகர் அப்பாவு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கோவை சம்பவம் குறித்து ஆளுநர் மீது விமர்சனங்களை முன்வைத்தார்.
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அப்பாவு பேசியதாவது “ஆளுநரை போல் நானும் பொதுவான பதவியில் இருப்பவர். எனினும் கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கும் உள்ளது. கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான தடையங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கூறியிருக்கிறார். எதன் அடிப்படையில் இவ்வாறான குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்பது எனக்கு தெரியவில்லை.
தடயங்கள் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றால் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம். ஆதாரங்களை அழித்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருக்கலாம். அதை விடுத்து பொதுவெளியிலும் ட்விட்டரிலும் ஆளுநர் கருத்து கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக அரசு கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் விரைந்து செயல்பட்டதாக ஆளுநர் ஏற்கனவே பாராட்டு தெரிவித்துள்ளார். இதன் பின்னரும் இத்தகைய கருத்துகள் கூறுவது எவ்வாறு ஏற்றுக் கொள்வது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த சம்பவத்தை நான்கு நாட்களுக்குள் தேசியப் புலனாய்வு அமைப்பிற்கு மாற்றி பரிந்துரை செய்தார். அதனை ஏற்று தற்பொழுது தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை தொடங்கியுள்ளது. தமிழக பாஜகவினர் கோவை கார் வெடிப்பு தொடர்பாக பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை ஈஸ்டர் பண்டிகையின் போது நடைபெற்ற குண்டுவெடிப்பில் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளை ஜமேஷா முபின் சந்தித்துள்ளார். அதன் பின்னர் அவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை உள்ளனர். விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவரை ஏன் தேசிய புலனாய்வு அமைப்பினர் விடுவித்தனர். பாஜகவும் தேசிய புலனாய்வு அமைப்பும் இணைந்து ஜமேஷா முபினுக்கு பயிற்சி கொடுத்து அனுப்பியதாக வதந்திகள் பரவுகிறது. இது போன்ற வதந்திக்களுக்கெல்லாம் அவர்கள் கூறும் பதில் போல் தான் ஆளுநரின் குற்றச்சாட்டிற்கு பதிலாக இருக்கும்” என காட்டமான விமர்சனங்களை முன் வைத்தார்.