மும்பை: ‘காவல் நிலையங்கள் தடை செய்யப்பட்ட பகுதி அல்ல. எனவே, காவல் நிலையத்துக்குள் வீடியோ எடுப்பது குற்றமாகாது,’ என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை சேர்ந்தவர் ரவீந்திர உபாத்யாய். இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. இது தொடர்பாக உபாத்யாய் பக்கத்து வீட்டுக்காரர் மீது வார்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த பிரச்னை தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரரும் உபாத்யாய் மீது அதே காவல் நிலையத்தில் எதிர் புகார் செய்தார்.
இது தொடர்பா,க 2018ம் ஆண்டு மார்ச் மாதம் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். உபாத்யாய் தனது மனைவியுடன் காவல் நிலையத்துக்கு வந்தார். காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்ட போது, உபாத்யாய் அதை தனது செல்போன் வீடியேணா எடுத்தார். இதை பார்த்த போலீசார், ‘காவல் நிலையத்துக்குள் வீடியோ எடுப்பது, அரசு ரகசியம் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம்,’ என்று உபாத்யாய் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை விசாரித்தது. நீதிபதிகள் மனீஷ் பிதாலே, வால்மீகி மெனேசஸ் அமர்வு வழக்கை விசாரித்தது.
விசாரணையின் முடிவில், உபாத்யாய் மீதான வழக்கை நீதிபதிகள் ரத்து செய்தனர். நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘அரசு ரகசியம் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முக்கிய இடங்கள், தடை செய்யப்பட்ட இடங்கள் என்று முழுமையாக வரையறை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வரையறை செய்யப்பட்டு தடை விதிக்கப்பட்ட இடங்களில் உளவு பார்ப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது குற்றமாகும். புகைப்படம், வீடீயோ எடுப்பதும் குற்றமாகும். ஆனால், காவல் நிலையங்கள் அதிகாரப்பூர்வமாக அரசு ரகசியம் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரையறை செய்யப்பட்ட இடமாக குறிப்பிடப்படவில்லை.
அதனால், காவல் நிலையத்துக்குள் வீடியோ, புகைப்படம் எடுக்கலாம். அது குற்றமல்ல. எனவே, உபாத்யாய் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது,’ என கூறியுள்ளனர்.