பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தேவர் குருபூஜை விழாவில் நிச்சயம் பிரதமர் மோடி பங்கேற்பார். அதற்கான ஏற்பாடுகளை தமிழக பா.ஜ.க செய்யும். மதுரை விமான நிலையத்திற்கு தேவர் திருமகனாரின் பெயரை சூட்டுவதில் பா.ஜ.க-விற்கு ஆட்சேபனை இல்லை. அதற்கான நடவடிக்கைகள் பிரதமர் மூலம் எடுக்கப்படும், பிரதமர் தமிழ்நாடு வரும்போது சமுதாய அமைப்பினர் பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்து தரப்படும்.
தமிழக காவல்துறையினர் கடினமாக உழைக்கக் கூடியவர்கள், அவர்களைப் பற்றி நான் அவதூறு பரப்புவதாக கூறுவது உண்மைக்குப் புறம்பான தகவல். காவல்துறையினர் அளித்த அறிக்கைக்கு பதிலுக்கு பதில் வரிக்குவரி இரண்டு மணி நேரத்தில் அறிக்கை வழங்குகிறேன். அப்போது விரிவான பேசுவேன். தமிழ்நாடு காவல்துறையினர் குறித்து நான் அவதூறாகப் பேசவில்லை. உயர் அதிகாரிகள் சிலரின் செயல்பாட்டை குறிப்பிட்டேன் அவ்வளவுதான்’’ எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், சற்று முன்பு அண்ணாமலை தான் குறிப்பிட்டிருந்தது போல் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். அதில்,“காவல்துறையா, அறிவாலயத்தை காக்கும் துறையா? நான் பல கருத்துகள் கூறி விசாரணையின் போக்கை திசை திருப்ப முயற்சிப்பதாக தொடங்குகிறது காவல்துறை தலைமையகத்திலிருந்து வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தி. ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி என்கிற முறையில் ஆளும் அரசை கேள்வி எழுப்புவது, மக்களிடம் உண்மையைக் கொண்டு சேர்ப்பது எங்களுடைய பொறுப்பாக உணருகிறோம். அதைக் கூடாது என்பதற்கு காவல்துறைக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. டிஜிபி சைலேந்திர பாபு நீங்கள் ஒரு காவல்துறை அதிகாரி தானே தவிர, உங்களை நீங்கள் ஒரு சர்வாதிகாரி என நினைத்துக் கொள்ள வேண்டாம்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அண்ணாமலையின் முழு அறிக்கை இங்கே PDF வடிவில் இணைக்கப்பட்டிருக்கிறது. அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்!