சென்னை: தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், “வடகிழக்கு பருவமழை உள்தமிழகம், கேரளா, தென் உள் கர்நாடகா, ராயலசீமா பகுதிகளில் பரவியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்இலங்கை கடலோரப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக
கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், இருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.