முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.
இந்தாண்டு இவ்விழா, கடந்த 25-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தினமும் யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளியதும், யாக வேள்விகள் நடந்து வந்ததன. சுவாமி ஜெயந்திநாதர் மற்றும் வள்ளி, தெய்வானை அம்பிகைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மூலவர் சுப்பிரமணியருக்கு பகலில் உச்சிகால தீபாராதனை நடந்ததும் யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு மகாதீபாராதனை நடந்தது. பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாச மண்டபத்தில் காட்சியளித்தார். மாலையில் சுவாமி அம்பாளுக்கு திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் அபிஷேக, அலங்காரத்திற்குப் பிறகு தங்கதேரில் எழுந்தருளி கிரி பிரகாரம் உலா வருதலும் நடந்தது.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (30ம் தேதி) மாலை 4 மணிக்கு மேல் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் யாகசாலை பூஜைகள் முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாச மண்டபத்தை வந்து சேர்கிறார். மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்திலிருந்து சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருள்கிறார். சம்ஹாரத்திற்குப் பிறகு சுவாமி ஜெயந்திநாதர், சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார். பின்னர், 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடக்கிறது. அதன்பின், சஷ்டி பூஜைத் தகடுகள் கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.
சஷ்டி விழாவிவை முன்னிட்டு தூத்துக்குடி மட்டுமில்லாமல் திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, தென்காசி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. சூரசம்ஹார விழாவை முன்னிட்டு கோயில் கடற்கரையில் பிரத்யாக கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 2,700 போலீஸாரும், 300 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். கோயில் வளாகம், நாழிக்கிணறு, வள்ளிக்குகை, கடற்கரை என திரும்பும் திசையெங்கும் பக்தர்களின் அரோகரா கோஷம் எதிரொலிக்கிறது.