தென்னகத்து போஸ் முத்துராமலிங்க தேவர் – மு.க. ஸ்டாலின் ட்வீட்

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு அக்டோபர் 28,29,30 ஆகிய மூன்று தினங்களில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறும். அப்படி இந்த ஆண்டு தேவரின் 115ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடந்துவருகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன்னுக்கு சென்றனர்.

திமுக சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் இன்று சென்று மரியாதை செலுத்தினர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்!

“தென்னகத்து போஸ்” ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தேவர் குருபூஜையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், நேற்று முன்தினம் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது. இதனையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் உடனடியாக வீடு திரும்பினார். அதேசமயம், நீண்ட தூர பயணங்களை தவிர்த்துவிடும்படி மருத்துவர்கள் முதலமைச்சருக்கு அறிவுறுத்தினர். எனவே இன்று நடக்கவிருக்கும் குருபூஜையில் முதலமைச்சர் கலந்துகொள்ளமாட்டார் என நேற்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே ஸ்டாலினுக்கு பதிலாக உதயநிதி ஸ்டாலின் குருபூஜையில் கலந்துகொள்வார் என தகவல் வெளியானது. ஆனால் அவர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.