ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பைலட் ரோஹித்ரெட்டி, ரேகா காந்தாராவ், குவ்வாலா பாலராஜூ, பீரம் ஹர்ஷவர்தன் ஆகியோர் ஐதராபாத் மொய்னாபாத்தில் உள்ள அஜிஸ்நகரில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த வாரம் சந்தித்தனர்.
இந்த பண்ணை வீட்டில் ஆளும் கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்களுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் ரூ.400 கோடி வழங்குவதற்காக டெல்லியை சேர்ந்த ராமச்சந்திர பாரதி, ஐதராபாத்தை சேர்ந்த நந்த கிஷோர், திருப்பதியை சேர்ந்த சிம்மயாஜிலு ஆகியோர் பாஜக சார்பில் பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
அதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமை இரவு, டிஆர்எஸ் கட்சியின் தாண்டூரு தொகுதி எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டி கொடுத்த தகவலின் பேரில் அவருக்கு சொந்தமான ஒரு பண்ணை வீட்டில், மொயினாபாத் போலீஸார் அதிரடியாக நுழைந்தனர். அங்கிருந்த 3 பேரை கைது செய்தனர்.
தெலுங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ.க்களை ரூ.400 கோடிக்கு பாஜக சார்பில் பேரம் பேசிய விவகாரத்தில், ஐகோர்ட்டு உத்தரவுப்படி கைது செய்யப்பட்ட மூவரையும் லஞ்ச ஒழிப்புத் துறை நீதிபதி முன்னிலையில் நேற்று இரவு போலீஸார் ஆஜர்படுத்தினர்.
குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க லஞ்ச ஒழிப்புத் துறை(ஏசிபி) கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அவர்கள் ஐதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.