ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நினைவு தினம் மற்றும் குருபூஜை விழா குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில், தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என குறிப்பிட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவைப் போற்றும் வகையில் 115ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா அவரது நினைவிடத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
தேவர் ஜெயந்தியையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக, பசும்பொன் செல்லவில்லை. அவர் சார்பாக தமிழக அமைச்சர்கள் பசும்பொன் தேவர் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினர்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே மரியாதை செலுத்தி வருகின்றனர். அதிமுக சார்பில் தேவருக்கு வழங்கப்பட்ட தங்கக்கவசம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி, ராமநாதபுரம் டி.ஆர்.ஓவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரை குருபூஜை நாளில் வணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.” என தமிழில் பதிவிட்டுள்ளார்.