பத்திரிகையாளர்களுக்கு ஸ்வீட் பாக்ஸுடன் ரூ.1 லட்சம் தீபாவளி பரிசாக கொடுத்த கர்நாடக முதல்வர்: கண்டனம் எழுந்ததால் வருத்தம் தெரிவித்தார்

பெங்களூரு: மூத்த பத்திரிகையாளர்களுக்கு தீபாவளி பரிசாக ஸ்வீட் பாக்ஸுடன் ரூ.1 லட்சம் கொடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 22-ம் தேதி கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் அலுவலகத்தில் இருந்து மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் பிரிவு செய்தி ஆசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஸ்வீட் பாக்ஸுடன் தீபாவளி வாழ்த்து அட்டை அனுப்பப்பட்டது. அத்துடன் ரூ.1 லட்சம் ரொக்க பணமும் இன்னொரு கவரில் போட்டு வைக்கப்பட்டு இருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறும்போது, “பண்டிகை சமயத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்களுக்கு இனிப்புகள், உலர் பழங்கள், பரிசுப் பொருட்களை அன்பளிப்பாக கொடுப்பது வழக்கம். ஆனால் முதல்வர் அலுவலகத்தில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்க பணம் அனுப்பப்பட்டு இருந்தது. இதனால் எனக்கு அதிர்ச்சியும் கோபமும் ஏற்பட்டது.

உடனடியாக முதல்வர் அலுவலகத்துக்கே அதனை திருப்பி அனுப்பிவிட்டேன். இன்னும் 6 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவ்வாறு பணம் கொடுத்து பத்திரிகையாளர்களை வளைக்கும் முயற்சியில் பசவராஜ் பொம்மை இறங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது” என்றார்.

இதேபோல சில மூத்த பத்திரிகையாளர்களும் கண்டனம் தெரிவித்ததுடன், அந்தப் பரிசை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனிடையே எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத ஆகியவை பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக விமர்சித்துள்ளன.

இதையடுத்து முதல்வர் பசவராஜ் பொம்மை பத்திரிகை ஆசிரியர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். அப்போது தனக்கு தெரியாமல் முதல்வர் அலுவலகத்தில் இருந்து இந்தப் பரிசு அனுப்பப்பட்டதாக பசவராஜ் பொம்மை விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.