புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்திருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்த போக்குவரத்துத் துறை ஆணையர் சிவக்குமார், “ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவருக்கும், அதில் பயணிப்பவருக்கும் ரூ.1,000/- அபராதத்துடன், 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கிழக்கு, வடக்கு போக்குவரத்து எஸ்.பி மாறன், ‘‘புதுச்சேரி நகரப்பகுதியில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு, பொதுமக்களின் நலன் கருதி நவம்பர் 1-ம் தேதி முதல் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
எனவே பொதுமக்கள், வியாபாரிகள், வணிக நிறுவன உரிமையாளர்கள் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். நேரு வீதியில் இரு பக்கங்களிலும் வாகனம் நிறுத்தும் முறை தடைசெய்யப்பட்டு, வரும் செவ்வாய் முதல் முன்பு இருந்தது போல் நேரு வீதியில் வடக்கு பக்கம் மட்டுமே ஒரு வரிசையில் வாகனங்களை நிறுத்த வேண்டும். இந்த நடைமுறை முன்பு இருந்ததுபோல் 6 மாதத்துக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும்.
புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறையினர், சுப்பிரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள செஞ்சி சாலையின் குறுக்கே சேதமடைந்த கால்வாய் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதால், வருகின்ற 2-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை அந்த சாலையில் கனரக வாகன போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் புதுச்சேரி நோக்கி மகாத்மா காந்தி ரோடு வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும், அஜந்தா சிக்னலிலிருந்து வலதுபுறமாகத் திரும்பி அண்ணா சாலையில் சென்று 45 அடி ரோடு வள்ளலார் சாலை, காமராஜர் சாலை, திருவள்ளுவர் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
மேற்கூறிய காலகட்டத்தில் இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் மேற்படி சாலையை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் வரும் 1-ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அதனை மீறி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் பள்ளி மாணவர்களின் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த நடவடிக்கை மேலும் தொடரும். எனவே பெற்றோர் தயவு செய்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை கொடுத்து அனுப்ப வேண்டாம்” என்றார்.