முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை இன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறுகிறது. தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்தி வழிபட பசும்பொன்னை நோக்கி பல அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்பு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று கொண்டிருக்கின்றனர். அதேபோன்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், பாஸ்கரன் ஆகியோர் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மானாமதுரை அருகே அதிமுக அமைச்சர்களின் வாகனம் சென்று கொண்டு இருக்கும் பொழுது விபத்தில் சிக்கி பரபரப்பை உண்டாக்கியுள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர்களின் கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக சென்றுள்ளது. அப்பொழுது எதிர்பாராத விதமாக குறுக்கே வந்த காரினால் முன்னாள் சென்ற கார் பிரேக் போட்டுள்ளனர். இதன் காரணமாக பின்னால் வந்த முன்னாள் அமைச்சர்களின் கார் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. குறுகிய இடைவெளியில் கார்கள் பயணித்ததால் உடனடியாக பிரேக் போட முடியவில்லை என கூறப்படுகிறது
இந்த விபத்தில் அதிமுகவின் கொடி கட்டிய நான்கு கார்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காமராஜருக்கு லேசான சிராய்வு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விபத்து நிகழ்ந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.