மெரினாவில் ரோப் கார் திட்டம் எப்போது? மேயர் பிரியா ராஜன் அறிவிப்பால் எகிறிய எதிர்பார்ப்பு!

சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், புதிய கோரிக்கைகள், முடங்கிய திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அதிகாரிகள் உரிய பதில்களை அளித்து வந்தனர். இந்நிலையில் 104வது வார்டு உறுப்பினர் செம்மொழி பேசுகையில், மெரினா கடற்கரையை ஒட்டி நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை ரோப் கார் திட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்த விஷயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கொண்டு என்று சிறப்பு கவனம் செலுத்தலாம் என வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்து பேசிய மேயர் பிரியா ராஜன், இதுவொரு நல்ல திட்டம். கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டும். அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் மாநகராட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகருக்கு புதிய போக்குவரத்து வசதியாக ரோப் கார் உருவாக வாய்ப்புள்ளது.

இது வருங்காலத்தில் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தக்கூடும். இந்த திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து மாநில அரசிடம் இருந்து இறுதி ஒப்புதல் பெற முயற்சி எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் ரோப் கார் திட்டம் குறித்து சென்னை மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மெரினா கடற்கரை என்பது நகர்ப்புற கடற்கரைகளின் பட்டியலில் சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் கூட்டம் 50 ஆயிரம் பேரை தாண்டிவிடும். இங்கு இலவச இணைய வசதியை அளிப்பதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் மெரினாவில் ரோப் கார் திட்டம் கொண்டு வருவது சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். மேலும் அதிகப்படியான மக்கள் வருகை புரிவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் இடையிலான தூரம் 3.5 கிலோமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மெரினாவில் கலங்கரை விளக்கத்தை ஒட்டி மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.

இதையொட்டி ’நம்ம சென்னை’ செல்ஃபி பாயிண்ட் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை – கலங்கரை விளக்கம் இடையிலான காவி வழித்தட மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்துவிடும். இதற்கான வேலைகளில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதன்மூலம் நகரின் மேற்கு பகுதியை கிழக்கு பகுதியுடன் எளிதில் இணைக்க முடியும். விரைவாக பொதுமக்கள் வந்து செல்ல முடியும். இவ்வாறு மெட்ரோ ரயில் சேவையால் மெரினாவின் வளர்ச்சி அடுத்தகட்டத்திற்கு செல்லவிருக்கும் நிலையில், ரோப் கார் திட்டமும் அதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.