ஒலிபெருக்கி எழுப்பிய சத்தத்தால் யானை கூட்டம் வந்திருப்பதாக ஊரைக் கூட்டிய விவசாயிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மலம்பேட்டை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தற்போது நெல் மற்றும் சோளம் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்றிரவு அந்தப் பகுதியில் இருந்து காட்டு யானைகள் சத்தமிடுவது போன்ற ஒலி கேட்டுள்ளது.
இதைக்கேட்ட அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள், இது குறித்து கடையநல்லூர் வனத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற வனத் துறையினர் மற்றும் போலீசார், அந்தப் பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதா என்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் ராஜா என்பவர் தனது விவசாய தோட்டத்தில் சோளம் பயிரிடப்பட்டுள்ள நிலையில், காட்டுப் பன்றி சோளப் பயிர்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக ஒலிபெருக்கி மூலம் யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் சத்தத்தை ஒலிபெருக்கி மூலம் ஒலித்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, அந்த ஒலி பெருக்கியை அணைத்த வனத் துறையினர் தண்டோரா உள்ளிட்ட சத்தங்களை பயன்படுத்தி வன விலங்குகளை விரட்ட முயற்சி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினர். இதற்காகவா இவ்வளவு பதற்றம் அடைந்தோம் என்று விவசாயிகள் நகைப்புடன் அங்கிருந்து சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM