புதுடெல்லி: விண்வெளி துறையிலும், சூரிய மின்சக்தி உற்பத்தியிலும் இந்தியா அதிசயங்களை நிகழ்த்தி வருவதாக பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது 94 வது மன்கி பாத் உரையில் மோடி பேசியதாவது: விண்வெளி துறையிலும், சூரிய மின்சக்தி உற்பத்தியிலும் நமது நாடு அதிசயங்களை நிகழ்த்தி வருகிறது. தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு, ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்களை இந்தியா விண்வெளிக்கு அனுப்பியது. இதன் மூலம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், கட்ச் முதல் கோஹிமா வரையிலும், நாடு முழுவதும் டிஜிட்டல் இணைப்பு மேலும் வலுப்படும்.
ஒரு காலத்தில் கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு மறுக்கப்பட்டது. ஆனால் இன்று இந்திய விஞ்ஞானிகள் உள்நாட்டு தொழில்நுட்பத்தின்மூலம் கிரையோஜெனிக் ராக்கெட்டை உருவாக்கியது மட்டுமல்லாமல், அதன் உதவியுடன் இன்று அதிக எண்ணிக்கையில் செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்வெளிக்கு அனுப்பி வருகின்றனர். இதற்கான உலக சந்தையில் இந்தியா தற்போது வலிமை பெற்று வருகிறது. இந்தியாவிற்கு புதிய வாய்ப்புகளின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் சூரிய மின்சக்தியை எதிர்காலமாக பார்க்கிறது. இந்தியா தனது பாரம்பரிய அனுபவங்களை நவீன அறிவியலுடன் இணைத்து வருகிறது, அதனால்தான், இன்று, சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக நாம் மாறி இருக்கிறோம். நமது நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை சூரிய ஆற்றல் எவ்வாறு மாற்றுகிறது என்பதும் ஆய்வுப் பொருளாகி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.