மக்களைக் கவர , பேக்கரி மற்றும் ரெஸ்டாரன்ட்டுகளில் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட உணவு சாம்பிளை காட்சிக்காக வைப்பதுண்டு. ஆனால் அந்த சாம்பிளையே சாப்பிடக் கொடுத்தால் எப்படியிருக்கும்..?
சாப்பிட வந்தவர்களுக்கு பிளாஸ்டிக் உணவு சாம்பிளை கொடுத்த விநோதமான சம்பவம் ஒன்று, ஜப்பானில் அரங்கேறி உள்ளது.
மேற்கு ஜப்பான், ஒசாகா பகுதியில் ஆண்ட்ரூஸ் எக் டார்ட் (Andrew’s Egg Tart) என்ற பேஸ்ட்ரி கடை உள்ளது. இந்தக் கடையில், மக்களைக் கவர, முட்டையின் உணவு சாம்பிள் வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் கடைக்கு வந்த இரண்டு வாடிக்கையாளர்களுக்கு, ஐந்து எக் டார்ட்டை ஊழியர்கள் விற்றுள்ளனர்.
பிளாஸ்டிக் ஃபுட் மிகவும் தத்ரூபமாக இருந்ததால், அங்குள்ள ஊழியர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வாங்கியவர்களுக்கும் எந்தச் சந்தேகமும் எழவில்லை.
சிறிது நேரத்திலேயே பிளாஸ்டிக் சாம்பிளை வைத்துள்ளதை உணர்ந்த ஊழியர்கள், அவர்கள் சாப்பிடுவதற்கு முன்பே தடுத்து, நடைபெற்ற தவற்றுக்காக மன்னிப்பு கேட்டுள்ளனர். இதற்கு மேல் உண்மையான உணவுகளையும், சாம்பிள் உணவுகளையும் வித்தியாசப்படுத்திக் காட்ட ஸ்டிக்கரை உபயோகிக்க உள்ளதாகக் கூறியுள்ளனர்.
`பிளாஸ்டிக் உணவு மாதிரி தொழில்’, ஜப்பானில் பல மில்லியன் டாலரை ஈட்டும் வணிகம். “shokuhin sampuru” என்று அழைக்கப்படும் இந்த மாதிரிகள், மிகவும் நுணுக்கமான விவரங்களுடன், ஓர் உணவு எப்படி இருக்குமோ அப்படியே வடிவமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.