அபுதாபியில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி – இந்திய அரங்கம் இன்று திறப்பு!

அபுதாபி,

அபுதாபி தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம், உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிறுவனம் சார்பில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்குகிறது.

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எரிசக்தித்துறை அமைச்சர்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்கள், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு இந்தியாவுக்கு, ஐக்கிய அரபு அமீரக அரசு அழைப்பு விடுத்துள்ளது. அந்நாட்டின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் சுஹைல் முகமது ஃபராஜ் அல் மஸ்ரூயி விடுத்த அழைப்பை ஏற்று இந்தியா சார்பில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

தமது பயணத்தின் போது அபுதாபி சர்வதேச பெட்ரோலிய கண்காட்சியில் ​​இந்திய பெட்ரோலியம் தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து அமைத்துள்ள அரங்கையும் அவர் திறந்து வைக்கிறார். மேலும் இந்த கண்காட்சியில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எரி சக்தித்துறை அமைச்சர்கள், எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்களையும் அவர் சந்திப்பார்.

மேலும் ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா இடையேயான எரிசக்தித்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த அந்நாட்டு அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் புரி விரிவான ஆலோசனை நடத்துவார் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.