விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் மீனா. இவர் தன் தங்கை, குழந்தைகளுடன் அப்பகுதியில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீட்டிற்கு அருகே உள்ள சர்வே நிலத்தில் வசிக்கும் காளிராஜன், பாண்டியராஜ், சிவக்குமார், காளிராஜ், குருவையா மற்றும் சுப்பையா உள்ளிட்டோர் நடைபாதையை பயன்படுத்தவிடாமல் மீனா குடும்பத்தினருடன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர், சிவகாசி தாசில்தார் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொள்ள குடும்பத்தினருடன் வந்த மீனா, ஆட்சியர் அலுவலக வாயிற்படி அருகே திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், மீனாவையும் அவரது குடும்பத்தினரையும் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், ஆட்சியர் நேரில் வந்து எங்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் குடும்பத்துடன் இங்கேயே தற்கொலை செய்துகொள்வோம் என மிரட்டல்விடுத்து தான் மறைத்து எடுத்துவந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தலையில் ஊற்ற முயன்றார். அப்போது சுதாரித்துக்கொண்ட போலீஸார், மீனாவின் கையிலிருந்து மண்ணெண்ணெய் பாட்டில் வைத்திருந்த பையை பறித்து அசம்பாவிதம் நடக்காமல் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அங்கு வந்த மாவட்ட அலுவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேசிய அதிகாரிகள், “வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் ஆய்வாளர் உட்பட அதிகாரிகளை நேரில் உடனடியாக வரவழைத்து நிரந்தர தீர்வாக பொதுப்பாதைக்கு வழி அமைத்து தர நடவடிக்கை எடுக்கிறோம்” என உறுதியளித்தனர். இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.