தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது, இவரது மனைவி துரை மீரா. இவர்களுக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சாகுல் ஹமீது 2வது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தனது கணவருடன் சேர்த்து வைக்ககோரி துரை மீரா தன் மகளுடன் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது தனது உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பாய்ந்து சென்று அவரை தடுத்து நிறுத்தி தலையில் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இது குறித்து தென்காசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து துரை மீரா கூறுகையில், தனக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆவதாகவும், கணவர் வெளிநாடு சென்று வேலை செய்து வந்தார். தற்போது மூன்று வருடங்களாக தென்காசியில் பணிபுரிகிறார். இந்நிலையில் நகை பணங்கள் என வரதட்சணை கொடுத்த நிலையிலும், மேலும் கேட்டு மாமியோரோடு சேர்த்து கணவர் தன்னை கொடுமை செய்து வருகிறார். மேலும் இது குறித்து புளியங்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தான் குழந்தை பிறந்த நிலையில் அழகாக இல்லை என்று கூறி வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். எனவே தனது பிள்ளையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என தெரிவித்தார்.வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெண் மண்ணெண்ணெய் கேனுடன் வளாகத்திலேயே தீக்குளிக்க முயன்ற சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.