புதுடில்லி: லேப்டாப்பை திருடிவிட்டு, உரிமையாளருக்கு மெயில் அனுப்பிய திருடன், லேப்டாப்பில் உள்ள முக்கிய பைல்களையும் சேர்த்து அனுப்பியுள்ளார். திருடனின் இந்த ‘நல்ல’ செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
திருட்டு சம்பவங்களில் பல நேரங்களில் சுவாரஸ்யமான நிகழ்வுகளும் அரங்கேறும். திருடர்களில் இரக்க குணம் உள்ளவர்களும் இருக்கிறார்களா என ஆச்சரியப்படும் வகையில் சிலர் திருடிய பொருட்களை மீண்டும் கொண்டுவந்து வைப்பதும், திருடியவர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிவைத்துவிட்டு செல்வதும் அவ்வபோது நிகழும்.
அந்த வகையில் ஒருவர் லேப்டாப்பை திருடி சென்றுவிட்டு, உரிமையாளருக்கு மன்னிப்பு கேட்டு மெயில் அனுப்பியுள்ளார். ஸ்வேலி திக்சோ (Zweli Thixo) என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனக்கு நடந்த நிகழ்வு குறித்து பதிவிட்டுள்ளார்.
அதாவது, ஸ்வேலி திக்சோ என்பவரின் லேப்டாப் இரவு நேரத்தில் திருடு போய் உள்ளது. அதில் தனது தனிப்பட்ட தகவல்கள் உட்பட பல முக்கிய தகவல்களை லேப்டாப்பில் பதிவு செய்து வைத்திருந்தால் கவலையில் இருந்த அவருக்கு திடீரென ஒரு மெயில் வந்துள்ளது. அதில், ‘ப்ரோ, எப்படி இருக்கீங்க? உங்கள் லேப்டாப்பை நான் நேற்று திருடிவிட்டேன். எனது தேவைகளை பூர்த்தி செய்ய எனக்கு பணம் தேவைப்பட்டது.
ஆராய்ச்சி பணிகளில் நீங்கள் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதை நான் பார்த்தேன். எனவே, அது தொடர்பான பைல்களை இதில் இணைத்து அனுப்பியுள்ளேன். உங்களுக்கு தேவையான வேறு முக்கிய பைல்கள் இருந்தாலும் திங்கள் கிழமைக்குள் தெரியப்படுத்துங்கள்..
ஏனென்றால் லேப்டாப்பை விற்பதற்கு எனக்கு ஒரு கஸ்டமர் கிடைத்துவிட்டார். மன்னித்துவிடுங்கள்’ என்று தெரிவித்து இருக்கிறார். தனக்கு தேவையான பைல்களை அனுப்பிய அந்த ‘நல்ல திருடனை’ நினைத்து ஸ்வேலி திக்சோ, சிரிப்பதா அழுவதா எனத் தெரியாமல் குழம்பி போயுள்ளார். இவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement